

மதுரை
மதுரை ஊமச்சிகுளம் கோகுல் நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது 55). விவசாய கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று கோரிப்பாளையம் பஸ்நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் சின்னபொண்ணு அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினார்.
இதேபோல் மதுரை அருள்தாஸ்புரம் பெரியசாமி நகரைச் சேர்ந்த சிவா என்பவரது மனைவி கார்த்திகா (19) என்பவர் கோரிப்பாளையத்தில் இருந்து அரசு பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது மர்ம நபர் அவரது செல்போனை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுவிட்டார்.
இந்த இரண்டு சம்பவம் குறித்து விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுரேஷ்குமார் ஆலோசனை பேரில் இன்ஸ்பெக்டர் முத்துமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் கார்த்திகாவின் செல்போன் டவரை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது போன் சிக்னல் நிலையூர் அருகே உள்ள கைத்தறி நகரில் காட்டியது. போலீசார் அங்கு சென்று அதிரடி விசாரணை நடத்தியபோது துர்கா காலனியை சேர்ந்த தமிழ்ச்செல்வம் மனைவி மஞ்சு (39) என்பவர் செல்போனை வைத்திருந்தார்.
இதையடுத்து தல்லாகுளம் போலீசார் மஞ்சுவிடம் நடத்திய விசாரணையில் கார்த்திகாவிடம் செல்போன் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.