திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி பெருவிழா தொடக்கம்
திருப்பரங்குன்றம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என பெருமை பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்ற விழாவாக பங்குனி பெருவிழா உள்ளது.
15 நாட்கள் நடைபெறும் இந்த விழா வருகிற 8ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5ம்நாள் விழாவாக “கைப்பாரம்“ நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் கோவிலிலேயே அதிக எடை கொண்ட வெள்ளி யானை வாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளுவார். பக்தர்கள் உள்ளங்கைகளில் சுவாமியை வாகனத்துடன் தூக்கி வந்து தரிசனம் செய்வார்கள்.
இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 18ந்தேதி பங்குனி உத்திர நிகழ்ச்சியும், 20ந்தேதி முருகப்பெருமானுக்கு வைர கிரீடம் சூட்டி செங்கோல் வழங்கும் பட்டாபிஷேக விழாவும் நடைபெறும்.
21ந்தேதி மீனாட்சி அம்மன், சொக்கநாதர், பிரியாவிடை முன்னிலையில் முருகன், தெய்வானை திருமண வைபவம் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 22ந்தேதி பெரிய தேரில் முருகன், தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவல பாதையில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

