

திருமங்கலம்
மதுரை-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை பணிகள் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பீடு ரூ.3 ஆயிரம் கோடியாகும். இதில் மதுரை-வாஞ்சி மணியாச்சி, வாஞ்சி மணியாச்சி-நெல்லை, நெல்லை-திருவனந்தபுரம் என 3 கட்டங்களாக பிரித்து பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த பணிகள் இந்த மாதத்திற்குள் நிறைவடைய வேண்டும் என அப்போது அறிவிக்கப்பட்டது. திருமங்கலம்-துலுக்கப்பட்டி ரெயில் நிலையம் வரை உள்ள 41 கி.மீ தூரத்திற்கான பணிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார்ராய் தலைமையில் ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. தற்போது அந்த வழியே ரெயில்கள் சென்று வருகின்றன.
திருமங்கலம்-திருப்பரங்குன்றம்-மதுரை இடையே உள்ள சுமார் 20 கி.மீ தூரத்தில் ரெயில் பாதைக்கு தேவையான எல்லை கற்கள் நடும் பணி மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துவிட்டன. ரெயில் பாதை பணிக்குத் தேவையான சிமெண்ட் கற்கள் திருமங்கலம் சுங்கச்சாவடி அருகே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகளானது இந்த பகுதியில் மிகவும் மந்தகதியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் தென்மாவட்டத்தில் இருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து ரெயில்களும் திருமங்கலம் அல்லது மதுரை ரெயில் நிலையத்தில் கிராசிங்கிற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கல்வி, மருத்துவம் மற்றும் வியாபாரம் உள்ளிட்டவைகளுக்காக மதுரையை சார்ந்து இருக்கும் நிலை உள்ளது. எனவே அடிக்கடி ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் கிராசிங் காரணமாக ரெயில்கள் நிறுத்தப்படுவதால் சரியான நேரத்தில் தாங்கள் விரும்பிய இடத்திற்கு செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்படும் நிலையில் தவிக்கின்றனர். மேலும் தென் மாவட்டங்களுக்கு கூடுதலான ரெயில்களை இயக்க முடியாத நிலையும் இருந்து வருகிறது.
இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்தினர் கூறுகையில், கொரோனா 3வது அலை காரணமாக தொழிலாளர்கள் பணிக்கு வராத காரணத்தால் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் பணிக்கு தேவையான மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாலும் பணிகள் தொடர்ந்து நடைபெறவில்லை என கூறுகின்றனர்.
இருந்தபோதும் தென்மாவட்ட எம்.பி.க்கள், மதுரை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் மற்றும் தெற்கு ரெயில்வே அதிகாரிகள், திருமங்கலம்-மதுரை இரட்டை ரெயில் பாதை பணிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.