

கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சிறுகுறு வியாபாரிகள் சுற்றுலா பயணிகளை நம்பியே தொழில் செய்து வருகின்றனர்.
குறிப்பாக வார இறுதி நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதால் வியாபாரம் ஓரளவு நடக்கும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரைமுறையின்றி கட்டப்பட்ட தங்கும் விடுதிகள் மூடி சீல்வைக்கப்பட்டது. அப்போது பலர் வேலையிழந்து வெளியூர் களுக்கு வேலைதேடி சென்றனர். அதன் பின்னர் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. வியாபாரிகள் ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெல்ல மீண்டு வந்தனர். தற்போது தமிழகத்தில் கொரோனா 3ம் அலை பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொடைக்கானலில் கடுமையான குளிர் நிலவிவருகிறது. வழக்கமாக சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்படும் வார இறுதி நாட்களில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.