மிகப்பெரிய விமானம் 124 டன் சரக்குடன் சென்னை வந்தது

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய சரக்குகளையும் துரிதமாக ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபட்டனர். சர்வதேச சரக்கு விமான போக்கு வரத்தில், சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடியது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிகப்பெரிய விமானம் 124 டன் சரக்குடன் சென்னை வந்தது
Published on

ஆலந்தூர்:

அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் நேஷ்னல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சரக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த, பெரிய ரக சரக்கு விமானங்களில் ஒன்றான 747-400 ரக சரக்கு விமானம், ஜோர்டான் நாட்டின் அம்மான் விமான நிலையத்தில் இருந்து, சுமார் 124 டன் சரக்குகளுடன் புறப்பட்டு, சென்னை சர்வதேச விமான நிலைய சரக்ககம் பகுதிக்கு வந்து தரை இறங்கியது.

வானத்தின் இளவரசி என்று அழைக்கப்படும் இந்த மிகப்பெரிய சரக்கு விமானம் சென்னையில் தரை இறங்கியது சென்னை விமான நிலைய சரக்கக பகுதியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக சரக்கக பகுதி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, விமானத்தில் வந்த சரக்குகளை இறக்கினர்.

மேலும் சென்னையில் இருந்து துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய சரக்குகளையும் துரிதமாக ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் அந்த சரக்கு விமானம் சென்னையில் இருந்து துபாய் வழியாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு புறப்பட்டு சென்றது.

இந்த சரக்கு விமானம் சுமார் 125 டன் சரக்குகளை ஒரே நேரத்தில் கையாளக்கூடியது.

அதுமட்டுமின்றி இது பயணிகள் விமானமாகவும் இயக்கக்கூடியது. பயணிகள் விமானமாக இயங்கும் போது, ஒரே நேரத்தில் 660 பயணிகள் செல்ல கூடிய விமானமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சென்னை விமான நிலையம் சரக்குகளை திறம்பட கையாளுவதில் தற்போது உலக அளவில் சிறந்த சரக்கக விமான நிலையமாக செயல்படுவதால் இதைப்போல் வெளிநாடுகளில் இருந்து, மிகப்பெரிய ரக சரக்கு விமானங்கள், சென்னைக்கு வந்து செல்கின்றன. இது சர்வதேச சரக்கு விமான போக்கு வரத்தில், சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடியது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com