கன்னியாகுமரி கடல் பகுதியில் விசைப்படகுகள் நாளை முதல் மீன்பிடிக்க தடை

சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கரை திரும்பும் மீனவர்கள்
சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கரை திரும்பிய விசைப்படகுகளை படத்தில் காணலாம்.
சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கரை திரும்பிய விசைப்படகுகளை படத்தில் காணலாம்.
Published on

கன்னியாகுமரி:

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ் கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் மீன் பிடிக்க நாளை முதல் தடை அமுலுக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து நாளை முதல் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்படுகிறது.

இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் 2 மாதகாலம் களை இழந்து வெறிச்சோடி காணப்படும். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கும். இந்த மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவார்கள். வள்ளம் மற்றும் கட்டு மரங்களில் மட்டும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். இதனால் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர்ரக மீன்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு இல்லை.

இந்த 2 மாத காலமும் உயர் ரக மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் இந்த உயர்ரக மீன்களின் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது. இந்த மீன்பிடி தடை காலத்தினால் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் அபாயநிலை ஏற்படும்.

இந்த மீன்பிடி தடை காலத்தினால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி அந்நிய செலாவணி வருவாய் இழப்பும் ஏற்படும். நாளை தடை காலம் தொடர்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் விசைப்படகுகளுடன் நேற்று முதல் அவசர அவசரமாக சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கரைக்கு திரும்பிய வண்ணமாக உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com