மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைந்து நிறைவேற்றப்படும்

கலெக்டர் ஸ்ரீதர் பேச்சுகாணி இன மலைவாழ் மக்களுக்கான புதிய வீடு கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைந்து நிறைவேற்றப்படும்
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் எயிட் இந்தியா சார்பில் மலைப்பகுதியில் வசிக்கும் காணி இன பழங்குடி மக்களுக்கு புதிய வீடு கட்டி கொடுக்கும் நிகழ்ச்சி பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட சிலாங்குன்று மலைப் பகுதியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு, காணி இன மலைவாழ் மக்களுக்கான புதிய வீடு கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணி களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் வசிக்கும் காணி பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு மாவட்ட வன அலுவலர் மற்றும் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் ஆகியோரின் பரிந்துரையின்படி விலையில்லா வீட்டு மனைப்பட்டா அதிக அளவில் வழங்கப்பட்டதோடு, அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் உலக வன நாள் தினமான மார்ச் 21-ந்தேதியன்று பேச்சிப்பாறை ஊராட்சி, சிலாங்குன்று பகுதியில் இதுநாள் வரை மின்வசதி இன்றி வசிக்கும் 4 காணி மலைவாழ் குடும்பங்களை சேர்ந்த பயனாளிகள் உட்பட 9 குடும்பங்களுக்கு சோலார் மின் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினம் சிலாங்குன்று மலைப்பகுதியில் வசித்து வரும் காணி பழங்குடியின மக்கள் தாங்கள் தங்குவதற்கு புதிய வீடு மற்றும் அடிப்படை தேவையான தண்ணீர் வசதி, சாலை வசதி உள்ளிட்டவைகளை நிறை வேற்றி தருமாறு என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். தமிழ்நாடு அரசானது அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் கல்வி, சுகாதாரம், அவர்கள் தங்குவதற்கான வீடுகள் வழங்க பல்வேறு நட வடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில் சிலாங்குன்று மலைப்பகுதியில் வசிக்கும் 2 பயனாளிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2.30 லட்சம் மதிப்பில் புதிய வீடு கட்டுவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் வசிக்கும் 2 குடும்பத்தினருக்கு வீடு கட்டுவதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைந்து நிறைவேற்றப்படுமென தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து சிலாங்குன்று மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுடன் கலெக்டர் ஸ்ரீதர் கலந்துரையாடினார்.

முன்னதாக, பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மணலோடை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி வளாகத்தினை கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com