புதுக்கடை அருகே திருமண வீட்டிற்கு சென்றவர் வயல் குட்டையில் பிணமாக மீட்பு

நேற்று காலையிலும் அவரை காணாததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
புதுக்கடை அருகே திருமண வீட்டிற்கு சென்றவர் வயல் குட்டையில் பிணமாக மீட்பு
Published on

கன்னியாகுமரி :

புதுக்கடையை அடுத்த காஞ்ஞாம்புறம் பகுதியை சேர்ந்தவர் பாலஸ். இவரது மகன் ஜெயசிங் (வயது 27). இவர் சமையல் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் (28-ந் தேதி) புதுக்கடை அருகே உள்ள அம்சி பகுதி நடுத்தலைவிளை பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் திருமண வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலையிலும் அவரை காணாததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்தநிலையில் நேற்று மாலையில் அதே பகுதி நடவரம்பு வயல் வழியாக செல்லும் சாலையோரம் ஜெயசிங் மோட்டார் சைக்கிள் நின்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வயல் பகுதியில் அவரை தேடினர். அப்போது வயல் பரப்பில் உள்ள குட்டை ஒன்றில் பிணம் ஒன்று மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். அப்போது அது ஜெயசிங் உடல் என தெரியவந்தது. போலீசார் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது.

இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பரி சோதனைக்கு பின் ஜெயசிங் எப்படி இறந்தார் என தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com