நகராட்சி அலுவலகத்தில் பெண்ணின் வாகன சாவி-பேக்கை பறித்த குரங்கு

இளம் பெண் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பேக்கை தூக்கிக் கொண்டு மரத்திற்கு தாவியது. கடந்த மாதமும் சாவியை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் போக்கு காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
நகராட்சி அலுவலகத்தில் பெண்ணின் வாகன சாவி-பேக்கை பறித்த குரங்கு
Published on

கன்னியாகுமரி :

குழித்துறை நகராட்சி கட்டிடத்தில் இ சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதார் திருத்தம், பிறப்பு, இறப்பு பதிவு செய்தல் போன்றவை நடைபெற்று வருகிறது. இதனால் நகராட்சி அலுவலக வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் ஒரு குரங்கு மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் பொருட்களை தூக்கிச் சென்று விடுகிறது. நேற்று மதியம் இந்த குரங்கு, ஆதார் அட்டை திருத்தத்திற்கு வந்த இளம் பெண் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பேக்கை தூக்கிக் கொண்டு மரத்திற்கு தாவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மரக்கிளைகளில் அமர்ந்த குரங்கு, பேக்கை திறந்து பார்த்தது. அதில் உணவு பொருள் ஏதும் இல்லாததால், பேக்கை தூக்கி எறிந்தது. பின்னர் மீண்டும் மோட்டார் சைக்கிளுக்கு வந்து அதில் இருந்த சாவியை தூக்கி சென்றது. அந்த சாவியை கையில் வைத்த படியும் வாயில் கவ்விய படியும் அங்கும் இங்குமாக தாவித்தாவி போக்கு காட்டியது.

பின்னர் அங்கு நின்றவர்கள் குரங்கிற்கு வாழைப்பழத்தை வாங்கி கொடுத்தனர். அதனை பெற்றுக் கொண்ட குரங்கு சாவியை தூக்கி எறிந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதமும் இந்த குரங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் இருந்த சாவியை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் போக்கு காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. வனத்துறையினர் குரங்கை பிடித்து காட்டில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com