மோகனூர் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடிய 2 பேர் சிறையில் அடைப்பு

கடை முன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சாவியை எடுக்காமல் வண்டியிலே வைத்துவிட்டு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.மாலையில் பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை.
மோகனூர் பகுதியில்  இருசக்கர வாகனங்கள் திருடிய  2 பேர் சிறையில் அடைப்பு
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள சீத்தப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் ( வயது 52). இவர் அணியாபுரத்தில் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 12-ந் தேதி தனது கடை முன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சாவியை எடுக்காமல் வண்டியிலே வைத்துவிட்டு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மாலையில் பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை.

இது குறித்து மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்நிலையில் மோகனூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றிக் கொண்டிருந்த 2 பேரை மோகனூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், கரூர் மாவட்டம், பெரியாண்டாங்கோவில் பெரியார் நகரைச்சேர்ந்த சுரேஷ்குமார் மகன் அகிலன் (22), கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனாம்புலியூர், முதலைப் பட்டியை சேர்ந்த வைரபெருமாள் மகன் செல்வராஜ் (32) என்பதும் தெரிய வந்தது.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அணியாபுரத்தில் திருடிய ஸ்கூட்டர், மோகனூர் அடுத்த கிராயூர் அரசு மதுபான கடை மேற்பார்வையாளர் மகேஸ்வரன் என்பவரது ஸ்கூட்டர் ஆகிய 2 வாகனங்களை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து செல்வராஜ் மற்றும் அகிலன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார், 2 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை நாமக்கல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாமக்கல் கிளைச் சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com