கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்ற கணவர் விபத்தில் பலி

அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக லட்சுமணன் மீது மோதியது. தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் பலியான லட்சுமணன்.
விபத்தில் பலியான லட்சுமணன்.
Published on

தருமபுரி, 

தருமபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்த தா.அய்யம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் லட்சுமணன் (வயது31).

இவருக்கும் புளியம்பட்டியைச் சேர்ந்த நதியா என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. இதில் நதியா தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு தாய்வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்த நிலையில் லட்சுமணன் தனது கர்ப்பிணி மனைவியை பார்ப்பதற்காக நேற்று மாலை புளியம்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார்.

அப்போது அவர் மணியம்பாடி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக லட்சுமணன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து லட்சுமணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தீவிரமாக தேடிவருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com