

வருசநாடு:
ஆண்டிப்பட்டி அருகே மயிலாடும்பாறையை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவரது மகன் வைஷ்ணவ்குமார். இவர்கள் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதியில் வசித்து வருகின்றனர். ஆந்திராவை சேர்ந்த ராஜலட்சுமி என்பவரிடம் கஞ்சா மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
அதன்படி 10 கிலோ கஞ்சா அவரிடம் பெற்று தேனியை சேர்ந்த சதீஸ்குமார், திருப்பூரை சேர்ந்த உமா, அழகர், கம்பத்தை சேர்ந்த சங்கிலி, திண்டுக்கல்லை சேர்ந்த ராஜேஸ் ஆகியோருக்கு தலா ஒரு கிலோ விற்பனை செய்துள்ளனர்.
மீதி 5 கிலோவை கடமலைக்குண்டு பகுதியில் உள்ள வீட்டில் பதுக்கி உள்ளதாக எஸ்.பி தனிப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இதில் வீட்டில் பதுக்கிய 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தெய்வேந்திரன் மற்றும் வைஷ்ணவ் குமாரை கைது செய்தனர்.
மேலும் அவர்கள் கஞ்சா பெற்ற பெண் மற்றும் விற்பனை செய்த நபர்கள் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.