

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் வைத்து கிராம உதயம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கர சுப்பையா தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலரும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன் முன்னிலை வகித்தார்.
கிராம உதயம் இலவச மருத்துவ துறை பொறுப்பாளர் கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். மகாத்மா காந்தி சேவா மன்ற தலைவர் மனோகர், சமூக ஆர்வலர்கள் பாட்டத்தூர் பால்ராஜ், சங்கரன்கோவில் பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் பிரியங்கா தலைமையிலான மருத்துவ குழுவினர் அனைவருக்கும் இலவசமாக கண் பரிசோதனை செய்தனர். இதில் 121 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அதில் 82 பேர் இலவச கண் மருத்துவ அறுவை சிகிச்சைக்காக சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கிராம உதயம் களப்பணியாளர் ஜெயராணி நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை கிராம உதயம் மருத்துவத் துறையினர் செய்திருந்தனர்.