

போரூர்:
சென்னை, கே.கே நகர் 10வது செக்டார் பகுதியில் வசித்து வரும் 26வயது இளம்பெண் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது வீட்டிற்கு நேற்று மாலை பெட்ரோல் கேனுடன் வந்த வாலிபர் ஒருவர் திடீரென தனது உடலின் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு “என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லையென்றால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன்” என்று கூறி மிரட்டல் விடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் உடனடியாக கே.கே. நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று தற்கொலை மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்ட வாலிபரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் வானகரம் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான ஜெயந்த்(26) என்பது தெரிந்தது. போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோது திடீரென அவர் சப்இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரை கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணையில் ஜெயந்த் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவர் கடந்த 2 ஆண்டுகளாக இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதும் தெரிய வந்தது.
ஜெயந்த்தும், பெண் என்ஜினீயரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தபோது பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஜெயந்த், பெண் என்ஜினீயரை காதலித்ததாக கூறப்படுகிறது.
இதனை அவர் ஏற்காததால் அதிக மன உளச்சலுக்கு ஆளான ஜெயந்த் மனநலம் பாதிக்கப்பட்டு ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் பெண் என்ஜினீயருக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததால் ஏற்கனவே மகளிர் போலீ சில் ஜெயந்த் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெயந்த் மீண்டும் பெண் என்ஜினீயரின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்ய வற்புறுத்தி தற்கொலை மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டு உள்ளார்.
ஜெயந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர், கீழ்ப்பாக்கம் மன நல ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டு உள்ளார்.