

செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஆத்தூர், அக்கரைப்பட்டி, மல்லையாபுரம் பகுதியில் பல இடங்களில் இரவு மற்றும் பகல் நேரங்களில் மண் எடுக்கப்பட்டு வருவதால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதாகவும், கிராமப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாவும் புகார் கூறினர்.
இந்நிலையில் மண் லாரிகள் மல்லையாபுரம், அக்கரைப்பட்டி, ஆத்தூர் வழியாக செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மல்லையாபுரம் பகுதியில் டிப்பர் லாரி, ஜே.சி.பி., பொக்லைன் எந்திரம் மூலம் மண் மற்றும் மணல் எடுத்து கொண்டு இருந்தனர்.
இதை அறிந்த இந்த பகுதி விவசாயிகள் அதனை தடுத்து நிறுத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இனி இதுபோன்று மண் எடுக்க மாட்டார்கள் என, லாரிகளை அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் இதே பகுதியில் டிராக்டர்களில் மண் எடுக்க சென்றனர். விவசாயிகள் அந்த டிராக்டரில் மண் எடுக்க விடாமல் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வராததை கண்டித்து விவசாயிகள் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தை திடீர் முற்றுகையிட்டனர். பின்னர் ஆத்தூர் தாசில்தார் சரவணனிடம் புகார் மனு அளித்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.