விபத்தில் இறந்த வாலிபரின் உடலை வாங்க மறுத்து சாலை மறியல்

திண்டுக்கல் அருகே விபத்தில் இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
சாலை மறியிலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
சாலை மறியிலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

செந்துறை:

திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே பிள்ளையார்நத்தத்தை சேர்ந்தவர் சிவக்குமார். (வயது 40). விவசாயி.இவர் செந்துறையில் இருந்து பிள்ளையார் நத்தத்திற்கு ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

அம்பலகாரன்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது கோட்டைப்பட்டியில் இருந்து செந்துறை நோக்கி வந்த மினிவேன் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஆட்டோவில் சென்ற சிவக்குமார் பலத்த காயமடைந்தார். ஆபத்தான நிலையில் செந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்ட சிவக்குமார் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே இறந்து 3 மணி நேரமாகியும் சிவக்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பிள்ளையார் நத்தம் கிராம பொதுமக்கள் நத்தம் பஸ் நிலையம் ரவுண்டானா முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்கள் மற்றும் வருவாய்த்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்த சிவக்குமாருக்கு 4 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com