

சென்னிமலை,
'கந்த சஷ்டி கவச' அரங்கேற்ற தலமாகவும், ஆதி பழனி என போற்றப்படும். சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று மாலை முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாக விழா கோலாகலமாக நடந்தது.
முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று முகப்பெருமானை வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 67-வது வருட வைகாசி விசாக பெரு விழாவினை முன்னிட்டு நேற்று முன்தினம் ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து சென்னிமலை வந்தடைந்தது.
நேற்று காலை 10 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைந்தது.
சென்னிமலை மலை மீது முருகன் கோவிலில் மதியம் 3 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கி கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடந்தது.
தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு முருகப்பெருமானுக்கு பஞ்சாமிருதம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து மாலை 6.30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது.
வைகாசி விசாக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழு அன்பர்கள் செய்திருந்தனர்.
வைகாசி விசாகத்தினை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மலை கோவிலில் குவிய தொடங்கினர். அதிகாலை காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் கிராம மக்கள் காவடி தீர்த்த குடங்களுடன் வருகை தந்து முருகப்பெருமான வழிபட்டு சென்றனர். கந்தசாமி அன்பர்கள் குழுவினர் படி பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.