பவானிசாகர் அணை 100 அடியை நெருங்கியது

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.96 அடியாக உள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் சென்றாலும் உபரிநீர் வெளியேற்றப்படாமல் சேமித்து வைக்கப்படும்.
பவானிசாகர் அணை 100 அடியை நெருங்கியது
Published on

ஈரோடு:

பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்தது.

இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.96 அடியாக உள்ளது. வினாடிக்கு 2,498 கனஅடி வீதம் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இதுவரை அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. பவானி ஆற்றுக்கு தொடர்ந்து 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 105 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையில் சேமிப்பு

இந்நிலையில் இந்த மாதம் இறுதி வரை பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடி வரை மட்டுமே தேக்கி கொள்ள முடியும் என்ற விதி உள்ள போதிலும் தற்பொழுது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் குறைந்த மழை அளவு பெய்த காரணத்தினாலும், அதனால் நீர்வரத்து குறைந்து காணப்படுவதாலும், இந்த மாதத்தில் இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள காரணத்தினாலும், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் வெளியேற்றப்படும் நீரினை அணையிலேயே சேமிப்பு செய்து பவானிசாகர் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி அதன்மூலம் குடிநீர் பாசனம் மற்றும் இதர பயன்பாட்டுக்களுக்கு வருங்காலத்தில் பயன்ப டுத்தலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் சென்றாலும் உபரிநீர் வெளியேற்றப்படாமல் சேமித்து வைக்கப்படும்.

இதுபோல் மாவட்டத்தில் மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், பெரும்பள்ளம், வரட்டு பள்ளம் அணை நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 41.75 அடி உள்ள குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 27.08 அடியாக உள்ளது. நேற்று பெய்த கன மழையால் ஒரே நாளில் குண்டேரிபள்ளம் அணை 3 அடி உயர்ந்துள்ளது.

இதேபோல் 33.50 அடி உள்ள வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.43 அடியாக உள்ளது. 30.84 அடியாக உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 18.04 அடியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com