

பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள பெரியூர், பள்ளத்துக் கால்வாய், மல்லியபாறை, கவுச்சிக்கொம்பு, காபிதோட்டம் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள காபி தோட்டங்களுக்குள் புகுந்து முள்வேலியை உடைத்து சேதப்படுத்தியதுடன் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு போன்ற பயிர்களை சேதப்படுத்தின. நேற்று இரவு யானைகள் பள்ளத்துக்கால்வாய் பகுதியில் உலா வந்தது.
பெரியூர் ஊராட்சி பள்ளத்துகால்வாயை சேர்ந்த விவசாயி வெற்றிவேல் தோட்டத்தில் யானைகள் புகுந்து வாழை, காபி, ஏலக்காய், பலாமரம் போன்ற பயிர்களை சேதப்படுத்தின. யானைகள் மரங்கள் மற்றும் மரக்கிளைகளை ஒடித்து சோலார் வேலியையும் சேதப் படுத்தியது. மலைக் கிராமங்களில் தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டி, தாசாரிபட்டியில் நாற்றுப்பண்ணை உள்ளது. இங்கு மரங்கள், செடி, கொடி உள்ளிட்ட அனைத்து வகையான நாற்றுகளும் தயார் செய்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு குட்டிகளுடன் யானைக்கூட்டம் பண்ணைக்குள் நுழைந்தது. அங்கிருந்த சோலார் மின்வேலி மற்றும் கேட்டுகளை அடித்து நொறுக்கியது.
அங்கிருந்த பல லட்சம் மதிப்பிலான நாற்றுகளையும் சூறையாடியது. அப்போது அங்கு ஆட்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புக்குள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.