கோட்டை மாரியம்மன் மாசித்திருவிழா வருகிற 27ந் தேதி தொடக்கம்

திண்டுக்கல்லில் பிரசித்திபெற்ற கோட்டைமாரியம்மன் கோவில் மாசித்திருவிழா வருகிற 27ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 15ந் தேதி வரை நடக்கிறது
கோட்டை மாரியம்மன்
கோட்டை மாரியம்மன்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் நகரில் கேட்டவருக்கு கேட்ட வரம் அளிக்கும் காவல் தெய்வமாக விளங்கும் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடம்  தோறும் நடைபெறும் மாசித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவை காண திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த வருடத்துக்கான திருவிழா வருகிற 27ந் தேதி வியாழக்கிழமை பூ அலங்காரத்துடன் தொடங்குகிறது. அன்று கோவில் கலையரங்கம் மண்டபத்தில் பல வித மலர்களால் விதவிதமான அலங்காரம் செய்யப்படும்.

மறு நாள் 28ந் தேதி வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் எனப்படும் பூத்தேர் ஊர்வலம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 30ந் தேதி சாட்டுதல், பிப்ரவரி 1ந் தேதி கொடியேற்றம், 11ந் தேதி பூக்குழி இறங்குதல் மற்றும் திருத்தேர் உலா, 12ந் தேதி தசாவதாரம், 13ந் தேதி மஞ்சள் நீராட்டுதல், 13ந் தேதி கொடி இறக்கம், 15ந் தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

கோவில் விழாக்கள் அனைத்தும் கடந்த ஆண்டைப்போலவே உள் பிரகாரத்திலேயே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதாலும், வார இறுதி நாட்களில் கோவில்கள் அடைக்கப்படுவதாலும், அரசின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு விழாக்கள் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ராட்டினம் உள்ளிட்ட குழந்தைகளை மகிழ்விக்கும் எந்த வித பொழுது போக்கு அம்சங்களும் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசித் திருவிழாவில் பக்தர்களை பங்கேற்க அனுமதி அளித்தால் மட்டும் போதும் என்ற மன நிலையில் பக்தர்கள் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் மாரியம்மனுக்கு பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே போல் இந்த வருடமும் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com