

தருமபுரி,
இந்திய எல்லை பாதுகாப்பு படையில் பல்வேறு பிரிவுகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பெண் வீரர்களை கொண்ட குழு சிறந்த முறையில் செயலாற்றி வருகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பெண்கள் எல்லை பாதுகாப்பு படையில் இணைய வேண்டும் என்பதே வலியுறுத்தும் வகையில் எல்லை பாதுகாப்பு படையின் பெண் கமாண்டோ வீரர் கீர்த்தனா தலைமையில் பெண் வீரர்கள் பங்கேற்ற மோட்டார் சைக்கிள் பயணம் தருமபுரிக்கு வந்தது.
தருமபுரி எல்லையில் பொது மக்களும், கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த மாதம் 5&ந் தேதி வாகா எல்லையில் தொடங்கிய இந்த மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து வந்துள்ளது. புது தில்லி, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியபின் தற்போது தமிழகம் வந்துள்ளது.
இந்திய பாதுகாப்பு படையில் முதல் முறையாக பெண் வீரர்கள் பங்கேற்ற முதல் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொது மக்கள் சார்பிலும் கல்லூரி மாணவிகள் மோட்டார் சைக்கிளில் வந்த பெண் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கிராமிய இசை கலைஞர்களின் மேளதாளங்களுடன் வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுமக்களுடன் இணைந்து பெண் வீரர்களும் உற்சாக நடனம் ஆடினர்.
இந்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணம் சேலம், கரூர், மதுரை வழியாக கன்னியாகுமரி சென்று மீண்டும் வருகிற 28&ந் தேதி சென்னையில் நிறைவடைகிறது.
நிகழ்ச்சியில் பாதுகாப்பு படை உயர் அலுவலர் யாதவ் முன்னாள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களின் நலச்சங்க மாநிலத் தலைவர் எஸ்.கே சீனிவாசன், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.