

தருமபுரி,
தருமபுரி அடுத்த தருமபுரி&பென்னாகரம் சாலையில் சோகத்தூர் கூட்டு ரோடு அருகே தனியார் நர்சிங் கல்லூரி இங்கு வருகிறது. இந்த கல்லூரியில் 500&க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நர்சிங் பயின்று வருகின்றனர். ஏற்கனவே நர்சிங் கல்லூரிக்கு எதிரே சிறிது தூரத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.
இந்த நிலையில் தனியார் நர்சிங் கல்லூரிக்கு எதிர்புறத்தில் புதிய அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளதை ரத்து செய்யக் கோரி இன்று நர்சிங் கல்லூரி மாணவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:&
தருமபுரி அடுத்த சோகத்தூர் அருகே தருமபுரி&பென்னாகரம் சாலையில் தனியார் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 500&க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இளங்கலை மற்றும் முதுகலை செவிலியர் பட்டப்படிப்பை பயின்று கொண்டிருக்கிறோம்.
மேலும் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மாணவிகள் விடுதி அமைந்துள்ளது. இந்த நிலையில் எங்கள் கல்லூரி முன்பு அரசு மதுபானக்கடையை ஏற்கனவே திறந்துள்ளது.
அதனை தடை கோரி மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தற்போது ஒரு மதுபானக்கடை திறக்க உள்ளதாக தகவல் வந்து உள்ளது. எனவே எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர் புதிய மதுபான கடை திறப்பதை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.