

திண்டுக்கல்:
பழனியில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் புன்னியத்தீர்த்தங்களை காவடிகளில் சுமந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நாளை திருக்கல்யாணமும், நாளை மறுதினம் பங்குனி உத்திர தேரோட்டமும் நடைபெறுகிறது. இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து காவடி தீர்த்தம் எடுத்தவாறு பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளனர்.
தைப்பூச திருவிழாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பக்தர்கள் பழனி நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.
பழைய வத்தலக்குண்டு பால தண்டாயுதபாணி பொங் கரம்மாள், காமாட்சிஅம்மன், உகந்தாய் அம்மன் கோவில் பங்காளிகள் சார்பில் பழனி பங்குனி உத்திர திருவிழாவிற்கு தொன்று தொட்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டும் பழனி பங்குனி உத்திர திருவிழாவிற்கு காவடி செலுத்தும் வகையில் பாலதண்டாயுதபாணி சுவாமி அருள் பெற்ற தங்கள் பாதயாத்திரையை இன்று தொடங்கினர்.
இதில் பலர் முருகன் வேடம் அணிந்து அரோகரா கோஷம் முழங்க தங்கள் பயணத்தை தொடங்கினர்.