

பழனி:
பழனியில் கடந்த பல ஆண்டுகளாக நாய்களுக்-கு கருத்தடை செய்யப்படவில்லை. இதனால் இதன் எண்ணிக்கை அதிகரித்து நகர் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தது.
வாகனங்களில் செல்பவர்கள் தெருநாய்களால் தடுக்கி விழுந்து விபத்தில் சிக்கி வந்தனர். இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் குறைத்துக் கொண்டே இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். எனவே நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சிக்-கு கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து தமிழக அரசு மற்றும் இந்திய பிராணிகள் நல வாரிய வழிகாட்டுதலின் படி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சையும் மற்றும் ரேபீஸ் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.
மதுரையைச் சார்ந்த பரணிமித்ரன் பிராணிகள் நலவாரிய அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மூலம் இந்தப் பணி நடைபெற்றது. நகராட்சி ஆணையர் கமலா தலைமையில் கால்நடை மருத்துவத் துறை உதவி இயக்குனர்சுரேஸ் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.
தெரு நாய்களை பிடிப்பதில் கை தேர்ந்த ஊழியர்களை கொண்டு இப்பணி மேற்கொள்ளப்பட்டது. அனைத்து நாய்களுக்கும் கருத்தடை மற்றும் ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டு 3 நாட்கள் கழித்து அவை எந்த இடத்தில் பிடிக்கப்பட்டதோ அதே இடத்தில் கொண்டு விடப்படும் என தெரிவித்தனர்.