கோவை அருகே குடிபோதையில் போலீசாரை தாக்க முயன்ற வாலிபர்கள்: 4 பேருக்கு வலைவீச்சு

போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக குடிநீர் பிடித்துக் கொண்டிருந்த நபரின் மண்டையை உடைத்த குடிபோதைக்காரர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நீலாம்பூர்:

கோவை மாவட்டம் நீலாம்பூரை சேர்ந்தவர் முருகன். இவரது வீட்டிற்கு நேற்று இரவு 4 வாலிபர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கு ஒன்றாக மது அருந்தினர். 

இதில் 4 பேருக்கும் போதை தலைக்கெறியதால் வீட்டை விட்டு வெளியில் வந்து, அந்த வழியாக சென்றவர்கள் மற்றும், அங்கு குடியிருக்கும் வடமாநில தொழிலாளர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் 4 வாலிபர்களில் 2 பேர் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

மற்ற 2 பேர் தொடர்ந்து அங்கு தகராறில் ஈடுபட்டனர். போலீசார் வாலிபர்களின் அருகில் வந்து, ஏன் தகராறு செய்து கொண்டிருக்கிறீர்கள். நேராக வீட்டிற்கு செல்லுமாறு கூறினர். ஆனாலும் அந்த 2 பேரும் அங்கிருந்து செல்ல மறுத்ததுடன், போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசி, போலீசாரை தாக்க முயன்றனர்.

வாலிபர்கள் 2 பேரும் அதிக போதையில் இருந்ததால் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்து கொண்டிருந்ததால் போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து செல்லவில்லை. மாறாக 2 பேரையும் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.

வாலிபர்களும் அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்து சென்றனர்.

இந்த நிலையில் போலீசார் சென்று விட்டதை அறிந்த 2 வாலிபர்கள் தங்கள் நண்பர்களுடன் மீண்டும் அந்த பகுதிக்கு வந்தனர். 

அப்போது அதே பகுதியை சேர்ந்த பத்மநாபன் என்பவர் தெருவில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். நேராக அவரிடம் சென்ற வாலிபர்கள் நீ தானே போலீசாருக்கு தகவல் கொடுத்தாய் என கேட்டு தகராறு செய்தனர்.

அவர் நான் இல்லை என்று கூறியும் விடாமல் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் அங்கிருந்த கட்டை மற்றும் கம்பால் பத்மநாபனை சரமாரியாக தாக்கினர்.

இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை தடுக்க முயன்ற பத்மநாபனின் மனைவிக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது தொடர்பாக பத்மநாபன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com