நோய் தாக்கத்தால் தென்னை விவசாயிகள் கவலை

தேனி மாவட்டத்தில் நோய் தாக்குதலால் தென்னை விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
கடமலை மயிலை ஒன்றியத்தில் தென்னை மரங்களை தாக்கி வரும் காண்டாமிருக வண்டு.
கடமலை மயிலை ஒன்றியத்தில் தென்னை மரங்களை தாக்கி வரும் காண்டாமிருக வண்டு.
Published on

வருசநாடு:

கடமலை மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடை பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக காண்டாமிருக வண்டு தாக்குதல் காரணமாக தென்னை மரங்களில் தேங்காய் உற்பத்தி கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

இது தொடர்பாக தென்னை விவசாயிகளிடம் கேட்டபோது, பொதுவாக மழைக்காலம் முடிந்த பின்பு தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு தாக்குதல் அதிகளவில் காணப்படும். ஆனால் அதற்கான மருந்துகள் தெளித்தால் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.

ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக அளவிலான காண்டாமிருக வண்டுகள் தென்னை மரங்களை தாக்கி வருகிறது. இந்த வகை காண்டாமிருக வண்டுகள் மரங்களின் இளம் குருத்துப்பகுதிகளை துளையிட்டு உள்ளே சென்று சாப்பிடும்.

இதனால் குருத்துப்பகுதி விரிவடையும் போது மற்ற தென்னை மட்டை முக்கோண வடிவத்தில் கத்தரித்தது போல இருக்கும். இதன் காரணமாக வழக்கமான உற்பத்தியை விட 15 முதல் 20 சதவீதம் வரை தேங்காய் உற்பத்தி குறையும்.

எனவே சம்பந்தப்பட்ட தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலை மயிலை ஒன்றிய கிராமங்களில் முறையாக ஆய்வு மேற்கொண்டு காண்டாமிருக வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com