வாக்கு சதவீதம் குறைந்ததால் வேட்பாளர்கள் அச்சம்

திண்டுக்கல் மாவட்டத்தில் எதிர்பார்த்த வாக்குசதவீதம் குறைந்ததால் வேட்பாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்
திண்டுக்கல்லில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்தில் ஓட்டளிக்க காத்திருந்த வேட்பாளர்கள்
திண்டுக்கல்லில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்தில் ஓட்டளிக்க காத்திருந்த வேட்பாளர்கள்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்டத்தில் 65 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தமுள்ள 1 லட்சத்து 83 ஆயிரத்து 534 வாக்காளர்களில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 484 பேர் ஓட்டு போட்டுள்ளனர். இதில் 66,050 பேர் வாக்களிக்கவில்லை.

நகராட்சியில் கொடைக் கானலில் 20 ஆயிரத்து 909 பேரும், பழனியில் 40 ஆயிரத்து 985 பேரும், ஒட்டன்சத்திரத்தில் 18 ஆயிரத்து 138 பேர் என மொத்தம் 80 ஆயிரத்து 32 பேர் ஓட்டு போடவில்லை. இதே போல் 23 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 3 லட்சத்து 10 ஆயிரத்து 395 வாக்காளர்களில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 536 பேர் வாக்களித்தனர்.

அதிகபட்சமாக அய்யலூரில் 84.92 சதவீதமும், குறைந்தபட்சமாக சின்னாளப்பட்டியில் 63.31 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தது.

மொத்தமுள்ள 6 லட்சத்து 12 ஆயிரத்து 926 வாக்காளர்களில் 4 லட்சத்து 33 ஆயிரத்து 52 பேர் தங்கள் வாக்கை பதிவு செய்துள்ளனர். இதில் ஆண்கள் 2 லட்சத்து 10 ஆயிரத்து 401 பேரும், பெண்கள் 2 லட்சத்து 22 ஆயிரத்து 649 பேரும் 3ம் பாலினத்தவர்கள் 2 பேர் மட்டும் வாக்கை பதிவு செய்துள்ளனர். 1 லட்சத்து 79 ஆயிரத்து 874  பேர் மாவட்டம் முழுவதும் வாக்களிக்கவில்லை.

வாக்குப்பதிவு நடக்கும் நாள் வரை அந்தந்த வார்டுகளில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்ததோடு பணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை தாராளமாக வழங்கினர். பொதுமக்களும் கட்சி பாகுபாடின்றி அதனை பெற்றுக் கொண்டு அனைத்து கட்சியினருக்கு பாதகமில்லாமல் நடந்து கொண்டனர்.

ஆனால் எதிர்பார்த்த பல்வேறு இடங்களில் குறைந்த வாக்குப்பதிவும், எதிர்பார்க்காத இடங்களில் அதிக அளவு வாக்குப்பதிவும் நடந்துள்ளது. இதனால் வாக்காளர்களின் மன நிலையை உணர முடியாமல் வேட்பாளர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். வாக்கு எண்ணிக்கைக்கு சில மணி நேரங்களே உள்ளதால் அது வரை அவர்களின் பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com