மத்திய குழுவினர் ஆய்வால் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் மேம்பாட்டு பணிகள் தீவிரம்

தனியார் ஒப்பந்த பணியாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் மாவட்ட நிர்வாக அனுமதியுடன் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

உடுமலை:

ஆண்டுதோறும் மத்திய மருத்துவக்குழுவினர் தமிழக அரசு மருத்துவமனைகளின் தரம் குறித்து நேரில் ஆய்வு செய்கின்றனர். 

அப்போது மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகள், சிகிச்சை முறைகள் கண்டறியப்படுகிறது. குறிப்பாக விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு, தீவிர சிகிச்சைப் பிரிவு என மருத்துவமனையின் அனைத்துப்பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். 

ஒவ்வொரு பிரிவுகளின் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்து 70 சதவீதத்திற்கும் குறையாமல் மதிப்பெண்கள் பெற்றால் அம்மருத்துவ மனைக்கு தேசிய தர உறுதிச்சான்று வழங்கப்படுகிறது.

அவ்வகையில் இருவாரங்களில் மத்திய குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்தவும் உள்ளனர். அதன்பேரில் உடுமலை அரசு மருத்துவமனையில் மேம்பாட்டுப்பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. 

தனியார் ஒப்பந்த பணியாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் மாவட்ட நிர்வாக அனுமதியுடன் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தனியார் பங்களிப்புடன் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவப்பணிகள் துறையினர் கூறியதாவது:-

தேசிய தர உறுதிச்சான்று பெற்றால் மத்திய அரசின் நிதி கிடைக்கும். அதன் வாயிலாக மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும். இதனால்  மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது பணியை சிறப்பாக செய்யவும்நிர்வாக மேம்பாட்டுப்பணிக்கு ஒத்துழைக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

முதற்கட்டமாக, மாநில மருத்துவக்குழுவினர் வருகை புரிந்து ஆய்வு மேற்கொள்ளவும் உள்ளனர். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com