திருநாவலூர் அருகே சொத்தை பிரித்து கேட்ட தம்பியை கொலை செய்த அண்ணன் கைது

பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கமலக்கண்ணன் , பிரபு , இளையராஜா.இளையராஜா, தனது மூத்த அண்ணனிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார்.
கமலக்கண்ணன்
கமலக்கண்ணன்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கமலக்கண்ணன் (வயது 41), பிரபு (38), இளையராஜா (35). இவர்கள் சகோதரர்கள். விவசாயம் செய்து வருகின்றனர். இதில் கமலக்கண்ணனுக்கு திருமணமாகி விட்டது. மீதமுள்ள 2 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. இவர்களுக்குள் சொத்து பிரிப்பதில் நிலத்தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் இளையராஜா, தனது மூத்த அண்ணனிடம் சொத்தை பிரித்து பாகப் பிரிவினை பத்திரம் எழுதி கேட்டுள்ளார். இதில் கமலக்கண்ணனுக்கும் இளையராஜாவிற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கமலக்கண்ணன், அருகிலிருந்த இரும்பு கம்பியால் இளையராஜாவை தாக்கினார். இதில் தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்த இளையராஜா, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கும், பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இளையராஜ் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கமலக்கண்ணனுடன் இருந்தவர்கள் யார்? யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

சொத்தை பிரித்து கேட்ட தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் திருநாவலூர் பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்து போன இளையராஜா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொத்து கேட்டு அவரது தந்தை ஏழுமலையை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com