

கும்பகோணம்:
திருப்பனந்தாள் அருகே திட்டச்சேரி கிராமத்தில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் கோவில் உள்ளது. இக்கோவிலில் இரவு வழிபாடு முடிந்த பின்னர் கோவிலை பூட்டி விட்டு சென்றனர்.
மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியலை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் பந்தநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்தை வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோவிலின் பின்புறம் உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி செல்வம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல், பந்தநல்லூர் அருகே நெய்குன்னம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை நள்ளிரவு மர்மநபர்கள் திருட முயன்றுள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் சிலர் கோவிலின் அருகில் சென்றதால் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. தொடர் சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.