

வத்தலக்குண்டு
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக். இவர் வத்தலக்குண்டு கடை வீதி பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு புதிதாக செல்போன் கடை தொடங்கினார். இங்கு புது செல்போன்கள் மட்டுமின்றி பழுது நீக்கும் பணியும் செய்து கொடுத்துள்ளார்.
நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலையில் கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
கடைக்குள் சென்று பார்த்தபோது விலை உயர்ந்த 30 புதிய செல்போன்களும், கல்லாவில் இருந்த ரூ.15,040 பணமும் திருடு போயிருந்தது. இது குறித்து வத்தலக்குண்டு போலீசாரிடம் ஜாபர் சாதிக் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிபபு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்ததில் இரவு 2.30 மணிக்கு மேல் 4 கொள்ளையர்கள் அப்ப குதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் காரை திறக்க முடியாததால் அங்கிருந்த செல்போன் கடையின் பூட்டை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. எனவே காரை திருடும் நோக்கில் வந்த கும்பல் செல்போன் கடையில் தங்கள் கைவரிசையை காட்டிச் சென்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனியார் பஸ் டிரைவர் பாண்டி என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருடு போனது. இது குறித்து போலீசில் புகார் அளித்தும் யாரும் பிடிபடவில்லை. இந்நிலையில் கடை வீதியில் செல்போன் கடையில் நடந்த இந்த திருட்டு சம்பவம் மற்ற வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.