ஆலங்குளத்தில் 2 வீடுகளில் கதவை உடைத்து திருட்டு

அந்தோணி வீட்டை பூட்டிவிட்டு புதுப்பட்டியில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார். மர்மநபர்கள் கதவை உடைத்து பணம், தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.
ஆலங்குளத்தில் 2 வீடுகளில் கதவை உடைத்து திருட்டு
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 57). தற்போது ஆலங்குளம் காந்தி நகரில் வசித்து வரும் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

கதவு உடைப்பு

நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது சொந்த ஊரான புதுப்பட்டியில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவு நேரத்தில் வீட்டு கதவை கடப்பாரை மூலம் உடைத்து உள்ளே சென்று ரூ.20 ஆயிரம் மற்றும் 3 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.

இன்று காலை அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கதவு உடைத்திருப்பது கண்டு அந்தோணிக்கு தகவல் அளித்துள்ளனர். அவர் வந்து பார்த்த பின்னர் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்

அதே தெருவில் வசிப்பவர் பொன்சிவராமச்சந்திரன் (40). இவர் 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு ஈரோட்டுக்கு சென்றுள்ளார். இதையும் நோட்டமிட்ட திருடர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த ரூ. 5 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகார்களின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குளத்தில் ஒரு மாதத்திற்கு முன் காமராஜர் நகரில் தொடர்ச்சியாக 3 வீடுகளில் புகுந்த திருடர்கள் ரூ. 15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடி சென்றனர். இந்நிலையில் மீண்டும் திருடர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com