தள்ளுவண்டியில் இறந்து கிடந்த சிறுவன்... போலீசில் சிக்கிய சிசிடிவி ஆதாரம்

பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுவன் உணவு இல்லாமல் பட்டினியால் இறந்திருப்பது தெரியவந்தது.
சிறுவனை சுமந்து வரும் நபர்கள்
சிறுவனை சுமந்து வரும் நபர்கள்
Published on

விழுப்புரம்:

விழுப்புரத்தில் சென்னை நெடுஞ்சாலையில் மேல் தெருவில் ஒரு ஷோரூம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளு வண்டியில் சுமார் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் கடந்த 15-ந்தேதி காலை பிணமாக கிடந்தான். சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த சிறுவன் கொலை செய்யப்பட்டானா? என்பது குறித்து விசாரணையை போலீசார் முடுக்கினர். ஆனால் அந்த சிறுவன் யார்? எந்த ஊரை சேர்ந்தவன் என்ற விபரம் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் உணவு இல்லாமல் பட்டினியால் அவன் இறந்திருப்பது தெரியவந்தது.

சிறுவனின் ஆடைகளை பார்க்கும்போது, அரசு அங்கன்வாடி குழந்தைகளுக்கான ஆடை என தெரியவந்தது. இந்த சிறுவன் யார்? என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் தீவிர விசாரணையில், ஒரு சிசிடிவி பதிவு கிடைத்துள்ளது. அந்த வீடியோவில் சிறுவனை ஒரு நபர் தோளில் சுமந்து வருவதும், அவருடன் மற்றொருவர் வருவதும் பதிவாகி உள்ளது. இதன்மூலம் அவர்கள் இருவரும் சிறுவனை தள்ளுவண்டியில்  போட்டுச்சென்றது உறுதியாகி உள்ளது. அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

வெளி மாநிலத்தை சேர்ந்த கடத்தல் கும்பல் இந்த சிறுவனை தனிமைப்படுத்தி உணவு கொடுக்காமல் வைத்திருந்து இறந்தபின்பு தள்ளுவண்டியில் போட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டது. சிறுவனின் போட்டோவை ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநில போலீசாருக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com