

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சியில் மாணவ- மாணவிகள் தூய்மை நகரங்களுக்கான சுகாதார உறுதிமொழியை நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி தலைமையில் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து சங்கரன்கோவில் நகரம் முழுவதும் அதிரடியாக சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
பஸ் நிலையம் கழிவறை சுகாதாரம் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு அதனை எப்படி சுகாதாரமாக பயன்படுத்துவது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்பு காவிரி நகர் மற்றும் கோமதி நகர் பூங்கா மற்றும் நகரில் உள்ள அனைத்து பொதுக்கழிப்பிடம் சுத்தம் செய்யப்பட்டது. முப்புடாதி அம்மன் கோவில் முன்பு உள்ள கட்டிடக்கழிவுகள் அகற்றப்பட்டது. கோவிலை சுற்றியுள்ள மாட வீதி சுத்தம் செய்யப்பட்டது. அரசு மருத்துவமனை அருகில் உள்ள சுவர்களில் சுவரொட்டிகள் அகற்றப்பட்டது, தகன மேடை சுற்றி சுத்தம் செய்யப்பட்டது, நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஹரிகரன், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், சரவணன், கவுன்சிலர்கள் செல்வராஜ், விஜயகுமார், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் எஸ்.பி.எம். பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.