சம்பா, தாளடி பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு உரிய உதவிகள்- கலெக்டர் தகவல்

தூர் வெடித்த பயிரினை கலைத்து வழித்தடங்களில் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம்.நடவு பயிர் அழுகியிருந்தால் குறுகிய கால நெல் ரகங்களை நடலாம்.
கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன்
கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன்
Published on

திருவாரூர்:

மழையிலிருந்து சம்பா, தாளடி பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு உரிய உதவிகள் வழங்கப்படுமென மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்து ள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

தொடர்மழை காரணமாக நெற்பயிர்கள் அவ்வப்போது மழையால் மூழ்க வாய்ப்புள்ளது. மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் மகசூழ் இழப்பை தவிர்ப்பதற்கு முதல்வழி வடிகால் வசதி அமைப்பது தான் இன்றியமையாதது. நீரினை வடித்து வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

சமீபத்தில் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள் நீரினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தால் நாற்றாங்காலில் மீதமுள்ள நாற்றுக்களை பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும்.

தூர் வெடித்த பயிரினைக் கலைத்து வழித்தடங்களில் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம். முழுவதுமாக நடவு பயிர் அழுகியிருந்தால் குறுகிய கால நெல் இரகங்களை நடலாம். அல்லது நேரடி ஈர விதைப்பு செய்யலாம்.

நீரில் மூழ்கிய பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட்டால் ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன், 18 கிலோ ஜிப்சம் 4 கிலோ வேப்பம்புண்ணாக்கு என்ற அளவில் கலந்து இரவு முழுவதும் வைத்து தண்ணீர் வடிந்த உடன் வயலில் இட வேண்டும்.

போதிய அளவு சூரிய வெளிச்சம் தென்பட்ட பிறகு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலைவழி உரமாக தெளிக்க வேண்டும். இலை மடக்குப்புழுவின் சேதாரம் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால் ஏக்கருக்கு 400 மி.லி. புரோபோனோபாஸ் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பாக்டீரியா இலைக்கருகில் நோயின் அறிகுறி காணப்பட்டால் ஏக்கருக்கு ஸ்டெப்ரோமைசின் சல்பெட், டெட்ராசைக்ளின் 120 கிராம் மற்றும் 500 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இரு முறை தெளிக்க வேண்டும்.

நோயின் அறிகுறி காணப்பட்டால் தழைச்சத்து உரமிடுவதை தவிர்க்கலாம். மேலும், விவரங்களுக்கு தங்கள் பகுதி
வேளாண் துறை அலுவலர்களை அணுகி தெரிந்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com