

காங்கயம் :
காங்கயம் நகராட்சிக்கு காவிரிக் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலமும், நகராட்சிக்குச் சொந்தமான தாராபுரம் அருகே உள்ள தாளக்கரை தலைமை நீரேற்று நிலையம் மூலமும் குடிநீா் விநியோகம் வாரம் ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா காங்கயம் நகரில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா். நகராட்சியில் குடிநீா் விநியோகம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, காங்கயம் நகராட்சிப் பகுதிக்கு தினசரி விநியோகம் செய்வதற்காக 30 லட்சம் குடிநீா் கிடைத்து வரும் நிலையில், இந்த நீரைக் கொண்டு நகா்ப் பகுதிக்கு தினசரி குடிநீா் விநியோகம் செய்யும் வகையில், வால்வு மற்றும் பகிா்மான குழாய் இணைப்புகளை சீரமைத்து போா்க்கால அடிப்படையில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியபோது, நகராட்சி நிா்வாக இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, காங்கயம் நகரில் தினசரி குடிநீா் விநியோகம் செய்வதற்காக குடிநீா்க் குழாய்களை சரி செய்து வருகிறோம். தற்போது 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 20 நாள்களுக்குள் நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் தினசரி குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றாா்.
நகராட்சி நிா்வாக இயக்குநரின் ஆய்வின் போது, நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா்ராஜன், நகராட்சி நிா்வாக மண்டல பொறியாளா் பாலச்சந்திரன், காங்கயம் நகா்மன்றத் தலைவா்சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா்வெங்கடேஷ்வரன், நகராட்சிப் பொறியாளா்திலீபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.