search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏ.சி. பெட்டி வெடித்து சிதறி தாய்-மகள் மூச்சுத் திணறி பலி
    X

    ஏ.சி. பெட்டி வெடித்து சிதறி தாய்-மகள் மூச்சுத் திணறி பலி

    • போலீசார் இருவரின் உடலையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தாய்-மகள் இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மற்றும் நஸ்ரித்தின் பள்ளி தோழிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

    அம்பத்தூர்:

    சென்னை அம்பத்தூர் அருகே உள்ள மேனாம்பேடு ஏகாம்பரம் நகர் கைலாசம் தெருவில் அகிலா பேகம் (50) மற்றும் அவரது மகள் நஸ்ரித் பேகம் (18) ஆகிய இருவரும் வசித்து வந்தனர்.

    அகிலா பேகத்தின் கணவர் ரஹ்மத் உயிரிழந்து விட்ட நிலையில் தாய்-மகள் மட்டும் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று இரவு அகிலா பேகம், நஸ்ரித் பேகம் இருவரும் சாப்பிட்டு விட்டு ஏ.சி.யை போட்டுக் கொண்டு நன்றாக தூங்கினர். இன்று அதிகாலை 4 மணி அளவில் இவர்கள் வசித்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது.

    இதையடுத்து வீட்டின் உரிமையாளரான ஜாகீர் உசேன் மற்றும் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீடு முழுக்க புகை மூட்டமாக காட்சி அளித்தது.

    படுக்கை அறையில் பொறுத்தப்பட்டிருந்த ஏ.சி. பெட்டி மின் கசிவு காரணமாக வெடித்து சிதறி தொங்கிக் கொண்டிருந்தது. அகிலா பேகமும், நஸ்ரித் பேகமும் உடலில் 30 சதவீத தீக்காயங்களுடன் தரையில் கிடந்தனர்.

    தீ விபத்து ஏற்பட்ட போது வீடு முழுவதும் புகை மூட்டம் பரவியதால் இருவரும் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் டெல்லி பாபு மற்றும் போலீ சார் இருவரின் உடலையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிரிழந்த நஸ்ரித் பேகம் பிளஸ்-1 மாணவி ஆவார். அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில்தான் அவர் மின் கசிவால் ஏற்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். கணவர் இறந்துவிட்ட நிலையில், அகிலா பேகம் பள்ளி ஒன்றில் பணியாளராக வேலை செய்து மகளை படிக்க வைத்ததும் தெரிய வந்துள்ளது.

    தாய்-மகள் இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மற்றும் நஸ்ரித்தின் பள்ளி தோழிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

    கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    Next Story
    ×