கவுண்டம்பாளையத்தில் டிபன் கடையில் பயங்கர தீ விபத்து

கணவன்-மனைவி பலத்த காயம் அடைந்தனர்.துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கவுண்டம்பாளையத்தில் டிபன் கடையில் பயங்கர தீ விபத்து
Published on

கவுண்டம்பாளையம்,

கோவை கவுண்டம்பாளையம் அடுத்த இடையர்பாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் ராஜன்(வயது 60). இவரது மனைவி சாந்தி(50).

இவர்கள் தங்கள் வீட்டின் முன்பு சிறிய அளவில் மாலை நேரத்தில் டிபன் கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை 2 பேரும் வீட்டின் முன்பு கடை போடுவதற்காக பொருட்கள் அனைத்தையும் எடுத்து தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கியாஸ் சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை சாந்தி பார்த்து விட்டார். உடனடியாக அவர் கியாசை ஆப் செய்வதற்கு சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் தீ பரவி பற்றி எரிந்தது.

இந்த விபத்தில் சாந்தி, அவரது கணவர் ராஜன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு கை, கால், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

இவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து 2 பேரை மீடடு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com