

சேலம்:
சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே உள்ள மின்னாம்பள்ளி ராஜமாணிக்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் ராகதேவன் (வயது 21). இவர் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே திடீரென தான் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ராகதேவனை தடுத்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறுகையில், கடந்த 21 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த நித்தியா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். கடந்த 3 நாட்களுக்கு முன்பு நித்யாவின் பெற்றோர் வந்து, நித்யாவை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர். மேலும் நித்யாவை அழைத்து வர, அவர் வீட்டிற்கு சென்றபோது என்னை விரட்டி விட்டனர்.
எனவே காரிப்பட்டி போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தனது மனைவியை மீட்டுத்தர வேண்டும் என்பதற்காகவே கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றேன் என்றார். போலீசார் தொடர்ந்து ராகதேவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.