தந்தை இறந்ததை அறிந்தும் பிளஸ்- 2 தேர்வு எழுதிய மாணவி

மாணவியின் தந்தைக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். மாணவியின் உறவினர்கள் பள்ளிக்கு வெளியில் சோகமாக நின்று கொண்டிருந்தனர்.
தந்தை இறந்ததை அறிந்தும் பிளஸ்- 2 தேர்வு எழுதிய  மாணவி
Published on

கடலூர்:

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி இன்று முடிவடைந்தது.கடலூர் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இன்று கடைசி தேர்வு என்பதால் மாணவ-மாணவிகள் தீவிரமாக படித்து காலை முதல் மதியம் வரை தேர்வு எழுதி முடித்தனர். இதில் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற பிளஸ் 2 மாணவி வேதியியல் பாடம் தேர்வு எழுதினார். அவரது உறவினர்கள் பள்ளிக்கு வெளியில் சோகமாக நின்று கொண்டிருந்தனர்.

அவர்களிடம் விசாரித்த போது மாணவி கிரிஜாவின் தந்தை பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்த பொம்மை செய்யும் தொழிலாளி ஞானவேல் (வயது 45) திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஞானவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சிக்குரிய செய்தி தெரிந்தும், மாணவி கிரிஜா இன்று பிளஸ்-2 கடைசி தேர்வு என்பதால் நேரில் வந்து தேர்வு எழுதினார் என்ற விஷயம் தெரியவந்தது.

தனது தந்தை இறந்தாலும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து மாணவி இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதியதை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் மாணவி கிரிஜாவுக்கு ஆறுதல் கூறி தேர்வு எழுத ஊக்கமளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com