6 மாதம் சம்பள பாக்கி: கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணை கேனுடன் வந்த தூய்மை பணியாளர்

6 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வரும் நிலையில் கடந்த 6 மாதமாக எனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.இது தொடர்பாக நான் கேட்கும் போது என்னை சிலர் மிரட்டுகின்றனர்
6 மாதம் சம்பள பாக்கி: கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணை கேனுடன் வந்த தூய்மை பணியாளர்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்கு உட்பட்ட சேதுராயன் புதூர் பஞ்சாயத்து தெற்கு தெருவை சேர்ந்தவர் பிச்சம்மாள் (வயது 55).

இவர் இன்று காலை நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தார். அப்போது அவர் கையில் ஒரு கேனில் மண்எண்ணை மறைத்து வைத்து கொண்டு வந்தார்.

இதனை அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் பார்த்து அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் மேலப்பாளையம் குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரித்தார். அப்போது அவரது கையில் இருந்த மனுவை வாங்கி படித்தார்.

நான் மானூர் யூனியனுக்கு உட்பட்ட சேதுராயன்புதூர் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறேன். சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வரும் நிலையில் கடந்த 6 மாதமாக எனக்கு சம்பளம் வழங்கப் படவில்லை.

இது தொடர்பாக நான் கேட்கும் போது என்னை சிலர் மிரட்டுகின்றனர். இதனால் நான் மானூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளேன். அவர்களும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது எனக்கு பதிலாக 2-வது வார்டு உறுப்பினரை தூய்மை காவலராக நியமித்து விட்டதாக கூறுகிறார்கள். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com