

மேட்டுப்பாளையம்,
கோவை மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை மூலத்துறையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது.
குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள இந்த செல்போன் டவரில் திடீரென கரும்புகை வந்தது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் சென்று பார்த்தனர்.
அப்போது செல்போன் டவரில் திடீரென தீ பற்றி மளமளவென எரிந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதற்குள் தீ மளமளவென பரவி ஜெனரேட்டர் பகுதி முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது.
இந்த விபத்தில் செல்போன் டவரில் இருந்த வயர்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயினை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.இதனால் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஏற்பட இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
செல்போன் டவர் தீ விபத்துக்கு காரணம் மின்கசிவா அல்லது யாரேனும் தீ வைத்தனரா என விசாரணை நடந்து வருகிறது.