கோயம்பேடு பஸ் நிலையத்தில் பரிதாபம்: இறந்த ஒரு வயது குழந்தையின் உடலுடன் தவித்த தாய்

குழந்தையின் உடலை கையில் வைத்துக்கொண்டு பஸ்நிலைய பிளாட்பாரத்தில் அமர்ந்த படி அலறினார்.சம்பவத்தால் நள்ளிரவு கோயம்பேடு பஸ்நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பரிதாபம்: இறந்த ஒரு வயது குழந்தையின் உடலுடன் தவித்த தாய்
Published on

போரூர்:

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யா. இவரது மனைவி சிவகன்னி. இவர்களுக்கு ரம்யா என்கிற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது.

குழந்தை ரம்யாவிற்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது குழந்தையின் 2 சிறுநீரகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

சிகிச்சைக்கு பணம் இல்லாமல் வறுமையில் தவித்து வந்த சூர்யா கூலிவேலைக்காக தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னை வந்தார். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் கோயம்பேடு மாநகர பஸ் நிலைய வளாகத்தில் உள்ள பிளாட்பாரத்தில் தங்கி இருந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு குழந்தை ரம்யாவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்து போனது.

இதனை கண்ட தாய் சிவகன்னி கதறி துடித்தார். அவர் இறந்த தனது குழந்தையின் உடலை கையில் வைத்துக்கொண்டு பஸ்நிலைய பிளாட்பாரத்தில் அமர்ந்த படி அலறினார். அங்கிருந்த அவரது கணவர் சூர்யா என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.

இதனை கண்ட பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் குழந்தை ரம்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக சூர்யா மற்றும் அவரது மனைவி சிவகன்னி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் சென்னை வந்ததாகவும் என்ன செய்வது என்று தெரியமால் பஸ்நிலைய பிளாட்பாரத்தில் தங்கி வேலைக்கு சென்று வந்ததாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். இச்சம்பவத்தால் நள்ளிரவு கோயம்பேடு பஸ்நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com