

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் ராமலிங்கம் (வயது 38) விவசாயி. இவர் வயல்வெளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் நீச்சல் தெரியாததால் ராமலிங்கம் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய வீரர் ராஜா மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி ராமலிங்கத்தின் உடலை மீட்டு பாசார் கிராம நிர்வாக அலுவலர் குழந்தைவேலுவிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.