கோவை புறநகரில் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்ற 4 பேர் கைது

பாதுகாப்பு அற்ற முறையில் ஆவணங்கள் இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 720 மதிப்புள்ள 255 பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.
கோவை புறநகரில் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்ற 4 பேர் கைது
Published on

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் உள்ள கடைகளில் பாதுகாப்பு அற்ற முறையில் ஆவணங்கள் இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஆனைமலை போலீசார் வேட்டைகாரன்புதூர் பகுதியில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சரவெடி உள்பட பல்வேறு வகை பட்டாசுகள் 61 பெட்டிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசை பதுக்கி விற்ற வேட்டைகாரன்புதூரை சேர்ந்த உதயகுமார் (வயது 47) என்பவரை கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த ரூ.57,100 மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.இதேபோன்று ஆனைமலை போலீசார் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு பேன்சி கடையில் சோதனை செய்தனர். அங்கு ரூ.26,620 மதிப்புள்ள பட்டாசுகள் 64 பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்தனர். இதனை போலீசார் கைப்பற்றி விற்பனையில் ஈடுபட்ட பேன்சி கடைகாரர் அண்ணாமலை (51) என்பவரை கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி காரமடையில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 55 பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைத்திருந்தனர்.

ஊட்டி ரோட்டில் உள்ள மளிகை கடையில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 75 பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரமடையை சேர்ந்த குமரேசன் (48) மற்றும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தேவநாத் (52) ஆகியோரை கைது செய்தனர்.நேற்று ஒரே நாளில் பட்டாசுகளை பதுக்கி விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 720 மதிப்புள்ள 255 பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com