கள்ளச்சாராய வியாபரியை தப்பவிட்ட 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

மணிகண்டன் போலீஸ் நிலையத்திலிருந்து திடீரென தப்பி ஓடிவிட்டார்.கரும்பு தோட்டத்தை சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
கள்ளச்சாராய வியாபரியை தப்பவிட்ட 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
Published on

சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த விஷசாராயம் குடித்து இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே கள்ளச்சாராயத்தை தடுக்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் வியபாரம் செய்வோர் மற்றும் அதனை கடத்துபவர்களை உடனடியாககைது செய்ய வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜித் சதுர்வேதி உத்தரவிட்டிருந்தார்

இதனை தொடர்ந்து போலீசார் இதுவரை சுமார் 86 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பிரபல கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் (வயது42) என்பவரை சங்கராபுரம் போலீசார் கள்ளச்சாராய வழக்கில் அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் போலீஸ் நிலையத்திலிருந்து திடீரென தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த தகவல் வெளியானதால் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே தப்பிஓடிய கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கியிருக்காலம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்து, போலீசார், கரும்பு தோட்டத்தை சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டனை தப்பவிட்ட சங்கராபுரம் போலீசார் 3 பேரை உடனடியாக ஆயுதப்படைக்கு இடம் மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜித் சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com