மது அருந்தி நடனமாடிய 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு

பூந்தோட்டம் அருகில் உள்ள அரசலாற்று பாலம் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.மது அருந்தி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
மது அருந்தி நடனமாடிய 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பூந்தோட்டத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் ஐயப்பன் (வயது 30). இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி தொழில் நடத்தி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு பூந்தோட்டம் அருகில் உள்ள அரசலாற்று பாலம் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக பேரளம் போலீசார் சந்தேக மரணம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இறப்பதற்கு முன் ஐயப்பனுடன் பேரளம் காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள் மணிகண்டன், பிரபு உள்ளிட்ட நண்பர்கள் மது விருந்து நடத்தி நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து இறந்து போன ஐயப்பனின் தந்தை அன்பழகன், தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதில் பேரளம் போலீஸ் மணிகண்டன் மற்றும் பிரபு ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.

இந்த புகார் மனு குறித்து மாவடட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் பணி நேரத்தில் உரிய அனுமதியின்றி தனிப்பட்ட நபரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதால் மணிகண்டன், பிரபு ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பணி நேரத்தில் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு மது போதையில் நடனம் ஆடிய போலீசார் 2 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com