ஐ.டி ஊழியர் வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை

குடும்பத்துடன் சினிமாவுக்கு சென்று திரும்பிய போது முன்கதவு பூட்டு உடைந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். சரவணம்பட்டியிலும் சித்ரா என்பவர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை
ஐ.டி ஊழியர் வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை
Published on

கோவை,

கோவை அடுத்த தொப்பம்பட்டி டி.ஜி.கே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 34), ஐடி நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சினிமாவுக்கு சென்றார். அப்போது யாரோ மர்மநபர்கள் முன்கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நெக்லஸ், ஆரம், கைச்செயின் உள்பட 16 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர்.

இந்த நிலையில் ஸ்ரீதர் வீடு திரும்பியபோது முன்கதவு பூட்டு உடைந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 16 பவுன் நகைகள் மாயமானது தெரிய வந்தது. ஸ்ரீதர் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து நகைகளை திருடி சென்று உள்ளனர்.

இதுகுறித்து ஸ்ரீதர், துடியலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு கை ரேகை நிபுணர்களுடன் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிராவில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என போலீசார் பார்வையிட்டு வருகின்றனர்.

கோவை கணபதி, காந்திமாநகரை சேர்ந்த தங்கவேல் மனைவி சித்ரா (51). இவர் சங்கனூரில் உள்ள பாட்டில் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சித்ரா சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார்.

பின்னர் வேலை முடிந்து மாலை வீடு திரும்பியபோது முன்கதவு உடைந்து கிடப்பதும், பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை மாயமானதும் தெரிய வந்தது. சித்ரா வேலைக்கு சென்றபிறகு யாரோ மர்மநபர் வீடு புகுந்து திருடி சென்றது தெரிய வந்தது.

சரவணம்பட்டி போலீசில் சித்ரா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து தங்கநகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com