

சென்னை:
தமிழக காங்கிரஸ் சார்பில் மாவட்டங்களின் எண்ணிக்கை 61-ல் இருந்து 72 ஆக உயர்த்தப்பட்டது.
அனைத்து மாவட்டங்களுக்கும் புதிதாக மாவட்ட தலைவர்களை மாநில தலைவர் திருநாவுக்கரசர் நியமித்தார். இளங்கோவன், ப.சிதம்பரம், தங்கபாலு ஆதரவாளர்கள் மாற்றப்பட்டனர். 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு திருநாவுக்கரசரின் ஆதரவாளர்களே மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
பல முன்னணி மாவட்ட தலைவர்களின் பதவியும் பறிக்கப்பட்டு இருப்பது கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மாவட்ட தலைவர்கள் மாற்றம் பற்றி கட்சி தலைமையில் புகார் செய்வேன் என்று இளங்கோவன் கூறி உள்ளார்.
இதற்கிடையில் பதவி பறிக்கப்பட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் போட்டு மாற்றத்துக்கான காரணம் கேட்டு தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்கள்.
காஞ்சி வடக்கு மாவட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் சக்கரபாணி ரெட்டியார் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ராமன், டாக்டர் அக்பர், ஜி.டி.சேகர், தாமோதரன், அருண்குமார், சீனிவாச நாயுடு, எம்.பி.குணா, நாஞ்சில் பிரசாத், செந்தில்நாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-
இந்த அறிவிப்பு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி காங்கிரஸ் கட்சியின் மீது கொண்டுள்ள பற்றினால் கட்சி வளர்ச்சியே குறிக்கோளாகக் கொண்டு இயக்கப் பணியாற்றி வரும் எங்களைப் போன்ற நிர்வாகிகள் பணிகளைக் கொச்சைப்படுத்தி உதாசீனப்படுத்தும் விதத்தில் உள்ளது. திறம்பட செயல்பட்ட மாவட்டத்தலைவர்களுக்கே இந்த நிலை என்றால், எங்களுக்கும் இதே நிலைதான் எதிர்காலத்தில் நடக்கும் என்ற அச்சமும், விரக்தியும் எழுந்துள்ளது.
சிறப்பாக செயல்பட்ட மாவட்ட தலைவர்கள் திடீரென மாற்றப்பட்டு புதிய தலைவர்களை மாநில தலைமை அறிவித்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சந்தேகத்தைப் போக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநிலத் தலைமைக்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்டும் இந்த நிர்வாகிகள் கூட்டம், புதிய மாவட்டத்தலைவர் நியமனத்திற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.