தொற்று நோய் பரவாமல் நடவடிக்கை: வெள்ளம் பாதித்த பகுதியில் பிளிச்சிங் பவுடர் விநியோகம்

தொற்று நோய் பரவாமல் தடுக்க நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதியில் பிளிச்சிங் பவுடர் வழங்கப்படுகிறது.
தொற்று நோய் பரவாமல் நடவடிக்கை: வெள்ளம் பாதித்த பகுதியில் பிளிச்சிங் பவுடர் விநியோகம்
Published on

சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. அவற்றை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வெளியேறிய பகுதியில் தொற்று நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை தடுப்பு நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுத்துள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதியில் மக்களுக்கு காய்ச்சல், வயிற்று போக்கு, சேற்றுப்புண் ஏற்படாமல் தவிர்க்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மாநகராட்சி சார்பில் 260 மருத்துவ முகாம்களும், நடமாடும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எழும்பூர் பயிற்சி மையத்தில் நடமாடும் மருத்துவக் குழுக்களை இன்று தொடங்கி வைத்தார். 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தையும் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெள்ளம் பாதித்த பகுதியில் தொற்று நோய் பரவாமல் தடுக்க 208 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 106 முகாம்கள் சென்னையிலும், 102 முகாம்கள் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியில் 260 மருத்துவ முகாம் செயல்படுகிறது. இது தவிர தயார் நிலையில் 5 மருத்துவ குழுக்கள் உள்ளன.

மருத்துவ குழுவினர் பிளிச்சிங் பவுடர் வழங்கி வருகின்றனர். குடிநீரில் குளோரின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பது ஆய்வு செய்யப்படுகிறது. அதனை ஆய்வு செய்ய 90 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுக்கள் தண்ணீரில் குளோரின் அளவு குறைவாக இருக்கிறதா? அதிகமாக இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com